Monday, February 2, 2009

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழிசையைப் பற்றி எழுதுகிறார்.

http://jeyamohan.in/?p=1416#

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!

Sunday, January 25, 2009

ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!

இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.

Tuesday, January 20, 2009

நாளை மற்றும் ஒரு நாளே

G நாகராஜன் எழுதிய "நாளை மற்றும் ஒரு நாளே" நூலைப் படித்தேன். 1973-74 ஆண்டுகளில் எழுதியது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான முறையில் எழுதப்பட்டதுப் போல் இருந்தது. படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கத் தோணவில்லை. நடையும் நமது வாசிப்புக்கு ஏற்றதாக இருந்தது. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு Gone with the Wind நூலில் வரும் கிடைசி வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது - "Afterall tomorrow is another day!" பல இலக்கியவாதிகள் இதை ஒரு முக்கியமான நூல் என்று கருதுகிறார்கள். இந்த 'முக்கியமான நூல்' என்கிற ஒரு வாசகமே தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. சங்கீதத்தில் அப்படி ஒரு வாசகத்தை நான் கேட்டதில்லை. இந்த 'முக்கியமான' விஷயங்களை அனுபவிப்பதும் ஒரு தனி இன்பமாகத் தான் இருக்கிறது.

இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் சங்கீதத்தில் "ramnad கிருஷ்ணன் பாட்டைக் கேளுங்கள்! அவர் ஒரு முக்கியமான பாடகர்!"

ஜெயகாந்தனின் "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் verbose ஆனாலும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.

Thursday, January 15, 2009

சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்

ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் - தேவி பாரதி

தேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை 'வரலாற்றை அறிதல்' என்ற முறையில் எழுதி இருக்கிறார். குறிப்பாக 1977 Emergency காலத்தில் அவருடைய பள்ளி அனுபவங்களும், 1984 தேர்தலின் பொழுது ஒரு சுவர் ஓவியராக வேலை செய்த அனுபவங்களையும் மிக ரசமாகவும் எளிய நடையில் எழுதி இருக்கிறார். படிப்பதற்கும் ரொம்பவும் சுவையாக இருந்தது. இது போன்ற எழுத்துக்களில் தனி நபர்களின் அனுபவங்கள் எப்படி ஒரு கால கட்டத்தின் வராலாற்றுடன் இணைகிறது என்ற ஒரு அழகான வடிவம் கிடைக்கிறது. ஒரு காலகட்டத்தின் வரலாறு பொதுவாக ஒரு academic பார்வையுடன் தான் எழுதப்படும். ஆனால் எல்லோரும் வரலாறு எழுதலாம் என்ற ஒரு தொனியில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் சேர்க்கும் பொழுது அந்த காலகட்டத்தின் பல அம்சங்கள் நன்றாக விரிவடைகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, MLA அவர்களின் நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் நன்றாகக்க் கையாண்டப்பட்டுள்ளன. பொதுவாக காலச்சுவடு போன்ற சிறு பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது எழுத்தாளர்களுடைய நவீன மொழி எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் படித்த தமிழ் கொஞ்சம் பழமையானது. சுமார் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை சொல்லலாம். ஆனால் தேவி பாரதியின் நடையில் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் இல்லை.

கிருஷ்ணன் நம்பி - சுந்தர ராமசாமி

சாகித்ய அகடெமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நூலைப் படித்தேன். இதே வரிசையில் மௌனி மற்றும் தி ஜானகிராமன் அவர்களைப்பற்றிய நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் இதில் சு ரா அவர்கள் கிருஷ்ணன் நம்பி எழுதிய சிறந்த சில சிறுகதைகளின் கதைத் தொகுப்பை வழங்கி அவருடைய தனிப்பட்ட விமர்சனத்தையும் சேர்த்து இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத் தொகுப்பை உடனே படக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

MV வெங்கட்ராம் அவர்களின் நித்யகன்னி இப்பொழுது தொடங்கி இருக்கிறேன். இதிகாசத்தை கற்பனைக்கேற்ப விரிவு படுத்தும் ஒரு முயற்சி. கிட்ட தட்ட கோபலகிருஷ்ண பாரதி திருநாளைப்போவார் சரித்திரத்தை நந்தனார் சரித்திரமாக செய்ததைப்போல்.

கிடைத்தது கமர்கட்!

சமீபத்தில் ஜெயா டிவியில் என்னுடைய நிகழ்ச்சியில் 'சின்ன சின்ன ஆசைகள்' என்ற ஒரு பகுதியில் "இந்த காலத்துல கமர்கட் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டேன்." நிகழ்ச்சி ஒளிபரப்பி ஓரிரு வாரத்திற்குள் ஒரு ரசிகர் மதுராந்தகத்திலிருந்து வந்து வீட்டில் செய்த கமர்கட்டைக் கொடுத்தார்! இது போன்ற சின்ன ஆசையாயிருந்தால் பரவாயில்லை! ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால்??? இதற்குத்தான் அந்த காலத்து மகாராஜக்களைப்போல் ஒரு கனவானின் ஆதரவு தேவை!

அடுத்து மதுரைக்கு சென்றபொழுதும் ஒரு அன்பர் கமர்கட் கொண்டு கொடுத்தார்! இனி அறுபத்து மூவர் திருவிழா வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

Friday, December 12, 2008

தொடங்கிவிட்டது சீசன்

சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 'சீசன்' என்னும் இசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக பொருளாதார நிலையினால் கச்சேரிகளின் எண்ணிக்கை குறையவில்லை! சபாக்களுக்கு டிக்கெட் வசூலில் குறைவு இல்லை ஆனால் கொஞ்சம் கம்பெனிகளின் ஆதரவில் இறக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

ஐந்து வயசிலிருந்து கச்சேரிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மியூசிக் அகாடெமியில் கச்சேரி கேட்பதுதான் அப்போ பெரிய விஷயம். அம்மா டிக்கெட் வாங்காமல் கேட்க முடியும் இலவச கச்சேரிகளை போய் கேட்கச் சொல்லுவார். 30 வருஷங்களுக்கு முன்பு மதுரை TN செஷகோபலனின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். மத்தியானம் 2 மணி, கூட்டம் நெரிக்கும். ஒரு வருஷம் அவருக்கு அடுத்ததாக வைஜயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி இருந்ததால் மேடையில் lighting அதிகம். சேஷகோபாலன் சாரின் பெர்சொனளிட்டி சற்று தூக்கலாகவே இருந்தது!

ஜெயா டிவியின் மார்கழி உத்சவம் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துகே கொண்டு பாடுவது என்று தீர்மானம். இந்த வருடம் நான் என்டுத்துக் கொண்ட தலைப்பு MM தண்டபாணி தேசிகர். இவர் ஒரு வாக்கேயகாரர் , அதாவது ஒரு பாட்டுக்கு இயல் இசை இரண்டையும் இயற்றியவர். இது போல் நமது இசையின் சிறந்த வாகேயக்காரர்களாக சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்லுவார்கள். இந்த ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு. ஆகையினால் அவர் இயற்றிய சில பாடல்களையும் அவர் இசை அமைத்த வேறு சிலவர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினேன். நல்ல வரவேற்பு. இந்த 'நல்ல வரவேற்பு' என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது எதோ தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது. இதுக்குதான் அப்பப்போ தமிழிலும் எழுத வேண்டும்!

பின் குறிப்பு: எல்லா சபாக்களிலும் டிபினுக்கு கான்டீன் வசதி உண்டு. கவனிக்க வேண்டிய ஒரு கான்டீன் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் தமிழ் இசை சங்கத்தின் கான்டீன். இன்னும் அங்கே தோசை 3 ரூபாய்க்கு கிடைக்குதாம்! அதுவும் ருசியான வெத்தலை தோசை!

Thursday, October 16, 2008

நீ யார் - எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப் பற்றிய ஆவணப்படம்

நேற்று மாலை எழுத்தாளர் சுந்தர ராமசமியப் பற்றிய "நீ யார்" என்ற ஆவஅனப்படதைக் பார்த்தேன். படத்தை இயக்கியவர் திரு RV ரமணி. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் "ஜேஜே சில குறிப்புகள்" என்ற நூலை மிகவும் ரசித்துப் படித்தேன். தமிழில் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை உணர்த்துவது போல் இருந்தது. பிறகு பல முறை காலச்சுவடு பத்திரிகையில் வரும் அவருடைய எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.

நான் அவரை நேரில் பார்த்ததில்லை. ரமணி அவர்கள் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்கு சொல்லி இருந்தார். ஆவலுடன் சென்று கண்டு களித்தேன். படத்தில் ரொம்ப பிடிச்ச இடங்களில் அவர் ரெண்டு இளம் பெண்களுடன் நடத்திய பேட்டி, டில்லியில் நடந்தது என்று நினைக்கிறேன். இதில் அவருடைய ஒரு மென்மையான குணமும், நகைச்சுவையும் ஒரு வகையான எதார்த்தமும் அழகாக வெளி வந்தது. அடுத்ததாக அவர் ஆற்றிய உரைகளில் அவருடைய தமிழ் மொழி ஆர்வமும், அந்த மொழியின் மேல் இருக்கும் பற்றும் அதன் இலக்கியம் உயர வேண்டும் என்ற ஆதங்கமும் அப்படியே பொங்கி எழும்புவது தெரிந்தது. அதுவும் அவர் டில்லியில் 'கதா" விருது வாங்கும் இடத்தில் தமிழிலேயே ஆற்றிய உரையும் பிரமாதம்.

எழுத்தாளர் சலபதி சொன்னது போல் ஜெஜெவை கண்டிப்பாக இன்னும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும். படத்தின் இயக்குனர் அவருடைய மரணமும், அதன் பிறகு இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதை ஒரு மய்யமாக எடுத்து, பல பேரை இதைப் பற்றி பேட்டி எடுத்து, கையாண்ட விதம் அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை. மரணமும் இறுதிச் சடங்குகளும் அவ்வளவு முக்கியமான ஒரு அம்சமாக இயக்குனர் நினைதாரானால் மரணத்தைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாமே. இதற்கு ஒரு எழுத்தாளரின் மரணம் அவசியம் இல்லையே!

தமிழில் எழுதி பழக்கம் இல்லை. இருந்தாலும் ஒரு சுந்தர ராமசாமி 18 வயதில் தமிழ் எழுத படிக்கக் கத்துக் கொண்டு ௨௩ வயதில் எழுத்தாளராக அவதாரம் எடுக்க முடியும் என்றால் after all ஒரு ப்ளாக்கில் நம்பால எழுத முடியாதா என்ன.