Friday, May 14, 2010

நல்ல எனர்ஜி சார்!

சமீபத்துல ஒரு கச்சேரி முடிஞ்சதும், ரசிகர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார், " சார் ஒங்க பாட்டுல நல்ல எனர்ஜி இருக்கு!" நானும் பல வருஷங்களாகக் கச்சேரி பாடியும் கேட்டும் இருக்கேன். இந்த மாதிரி பாராட்டுவதைக் கேட்டதே இல்லை. அப்பறந்தான் விஷயம் புரிஞ்சுது. எல்லாம் டீவீல வரும் "மானாட மயிலாட"வின் மகிமை!

முக்கிய அறிவிப்பு! பெண்கள் கிரிக்கெட் !

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் "உலகக் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சைத் தூக்கிட்டாங்களாம்!" அப்படியும் நம் பெண்மணிகள் அறை இறுதி ஆட்டத்துக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தார்கள். நம்ப ஆளுங்களுடைய கேவல ஆட்டத்துக்கு, கொஞ்சம் பெண்கள கவனிக்கலாம்னு நினைக்கிறேன்.

Thursday, May 13, 2010

இப்படியும் ஒரு போலீஸ்கார்!

என் நண்பர் ஒருவர் நேற்று லஸ் கார்னர் சிக்னலில் திரும்பும்போது போலீஸ்கார் நிறுத்தினார்.
 "கொஞ்சம் நிறுத்துங்க! சிக்னல் ரெட் தெரியலே?"
"இல்லே சார் கிரீன் தானே!"
"அங்க எஸ் ஐ இருக்காரு போய் பாருங்க."
நண்பர் எஸ் ஐய பார்த்தார்.
"நூறு ரூபா கட்டுங்க. சிக்னல்ல தப்பா வந்தீங்க."
எதுக்கு வம்புன்னுட்டு நூறு ரூபாய கட்டிட்டு வண்டியில ஏறினார்.
 முதல்ல நிறுத்தின போலீஸ்கார், "சாரி சார்! எஸ் ஐ கூப்ட  சொன்னார். அதான் நிறுத்தினேன். என்ன தப்பா நினைக்காதீங்க. உங்க வண்டிய நிறைய பார்த்திருக்கேன். நீங்க சிக்னல் தப்பவே மாட்டீங்க. தப்பா எடுத்துக்காதீங்க சார்!"

Tuesday, May 11, 2010

படித்து ரசித்தது - அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு - ஆபிதீன்

இது ஒரு சின்ன சாம்பிள்


"அன்று நான் வீட்டிற்கு வெளியேயுள்ள வராந்தாவில் ரிலாக்ஸ்டாக - 'சாய்' கிடைக்காமல் - சாய்ந்திருந்தேன். தெருவைத்தான் நான் வராந்தா என்று சொல்கிறேன். வீடு அப்படி. வீட்டின் நிலைமை அப்படி. முப்பது வருட அரபுநாட்டு சம்பாத்தியம் என்றால் சும்மாவா? தேரடியிலிருந்து அதிர்ந்தபடி தெருவிற்குள் நுழைந்து, கடற்கரைநகருக்கோ அல்லது அங்கிருந்து குஞ்சாலித்தெருவில் திரும்பி தர்ஹாவுக்கோ விரையும் வாகனங்கள் எழுப்பும் புழுதிதான் எனக்கு புகழுரை. எதிர்வீட்டு ·பர்ஹான்பாய் வீட்டிலிருந்து ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பாட்டு கேட்டது. பின்னே, துலுக்கத் தெருவில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே'யா வரும்? என்றெல்லாம் நீங்கள் துடுக்குத்தனமாக கேட்கக் கூடாது. என்னைப்போல சிலரின் வீட்டிலிருந்து வரும். '(பாலாஜியை நான் தரிசிப்பதற்காக) என்னை யாரும் திட்டலாம். ஆனால் சு(ரு)தியோடு திட்டனும்' என்று கண்டிஷன் போடும் பனாரஸ்கான்கள் போல ஓரிரு கான்கள் எங்கள் ஊரில் இப்போதும் உண்டென்று காண். But they are not Terrorists!"


முழு கதை 

Sunday, May 9, 2010

சிட்டி 100

சிட்டி என்ற PG சுந்தர்ராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு நேற்று  போய்வந்தேன். ஒரு ஆறு வருடங்களுக்குமுன் அவரைச்சந்தித்து பேசிய அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் ஏற்பட்ட காலம். பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவில் கச்சேரிக்காக வந்த திரு வேணுகோபால் சிட்டி அவர்களின் மகன் என்று தெரிந்து கொண்டேன். சிட்டியும் திஜாவும் எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயண நூலை படித்திருக்கிறேன். அதனால் சிட்டி என்ற பெயர் சொன்னவுடன் புரிந்து கொண்டேன். அதுவும் அந்த நூலில் சங்கீதத்தைப் பற்றிய சில விஷயங்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டதனால் ஞாபகம் இருந்தது. தெரிந்தவுடன் அவரைப் போய் சந்தித்தேன். அவருக்கு அப்போது தொண்ணூறு வயதுக்குமேல் இருக்கும். ஆனால் எந்த ஒரு மன தளர்ச்சியும் தெரியவில்லை. அப்போது பல அறிய விஷயனகளைப்பற்றி பேசினார். அவர் ஒரு மதுரை மணி அய்யர் ரசிகர் என்றும் "மதுரை மணி கச்சேரி" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Maduraa bell court" என்று சொல்லுவார்களாம். திருச்சியில் ஒரு இடத்தில் மதுரை மணி அய்யர் ரசிகர்கள் கூடும் மண்டபம் ஒன்றில் அவர் அடிக்கடி கச்சேரி செய்வார். அந்த இடத்தை வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேச இயர் "மணி மண்டபம்" என்று சொல்லுவாராம்!

அன்று சிட்டி அவர்கள் எனக்கு அவருடைய வாழ்க்கை நூலாகிய "ஒரு சாதாரண மனிதனின் கதை" கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதைப் படித்தப்பிறகு எனக்கு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி படிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு முறை புத்தகக் கண்காட்சியில் PS ராமையா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற நூலை வாங்கிப் படித்தேன். சிட்டி அவர்களைச் சந்தித்தப் பிறகு அவர் என் கச்சேரியைக் கேட்க வந்தார். நான் அன்று சன்முகப்ரியாவில் "மரிவேரே" கிருதியைப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் அந்த பாடல் மதுரை மணி அய்யர் அழகாகப் பாடுவார் என்று நினைவு கூர்ந்து சந்தோஷப் பட்டார்.

சிட்டியின் வாழ்க்கை வரலாற்றில் எனக்குப் பிடித்த ஒரு முக்கியமான் இடம் அவர் பாரதியார் விஷயத்தில் கல்கிக்கு எழுதிய கடிதம். அந்த ஒரு நகைச்சுவை, கிண்டல், கூர்மையான வாதம் எல்லாம் அற்புதாமாகத்  தெரிகிறது. இதிலே கல்கி பாரதியை மேல் நாட்டுப் புலவர்களுக்கு ஈடாக வைக்கக் கூடாது என்று எழுதியதை எதிர்த்து சிட்டி குடுக்கிற பதில்தான் அந்த கடிதம். இந்தியாவில் நாம் பொதுவாக நம் சமகாலத்தவரின் பெருமைகளைப் பேசுவதற்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இசையில் தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றவர்கள் அவர்கள் காலத்திற்குப் பிறகு அதிக அளவில் போற்றப்படுகிறார்கள். அதே போல பாரதிக்கும் இதே கதி தான் என்று தெரிந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக  இருந்தது. இப்போதும் டெண்டுல்கரை  ஒத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். சிட்டி தைரியமாக பாரதியின் பெருமையை விளக்கி கல்கியின் வாதத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்.

நடந்தாய் வாழி காவேரி நூலை நான் ஆங்கிலத்தில்தான் படித்தேன். சமீபத்தில் தமிழ் பிரதி ஒன்று கிடைத்தது. விரைவில் படிக்க வேண்டும்.

Friday, May 7, 2010

இணையத்தில் யூடியுப் வீடியோக்கள்

என்னுடைய பல வீடியோக்கள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன. எல்லாத்தையும் ஒன்று சேர்த்து ஒரு யூடியுப் சேனல் ஒன்றை அமைத்துவிட்டேன்.

http://www.youtube.com/sanjaysub