Wednesday, August 5, 2009

பாரதி 'யார்' ????

இன்று நண்பர் ஸ்ரீராம் ஒரு கதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு பிரபல டிவி சானலிலிருந்து ஒரு இளம் பெண் நிருபர் போன் செய்து, " சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இரண்டு ப்ராபல்யமான சுதந்திர சம்பந்தப்பட்ட இடங்கள் என்ன இருக்கிறது" என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் மெரினா பீச் அந்த காலத்தில் பல கூட்டங்களுக்காக உபயோகப்பட்டதென்றும், கோகலே ஹால் இன்னொரு முக்கியமான இடம் என்றும் கூறினார். அந்த நிருபருக்கு கோகலே யார் என்று தெரியவில்லையாம்! சரி அது போகட்டும், அவராவது வடக்கத்திக்காரர். அடுத்து ஏதாவது ஒரு சுதந்திர வீரரின் வம்சத்தில் இருக்கும் ஒரு நபர் யாரவது இருந்தால் பேட்டி எடுக்கலாம் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் ராஜ்குமார் பாரதி, சுப்ரமணிய பாரதியின் கொள்ளு பேரன் இருப்பதாகச்சொன்னார். அதற்கு அந்த நிருபர் "சுப்ரமணிய பாரதி யார்?" என்று கேட்டாளாம்! ஸ்ரீராம் எதற்கும் அந்த பெண் எந்த பள்ளியில் படித்தாள் என்று கேட்டதற்கு சென்னையில் இருக்கும் ஒரு 'பாஷ்' பள்ளியின் பெயரைச் சொன்னாளாம். இதைக் கேட்டதும் விவேக் ஒரு படத்தில் பாரதியின் படத்தை காட்டி யாரென்று கேட்டதற்கு ஒரு பய்யன் " கே டி குஞ்சுமோன் " என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது! தமிழ் நாட்டில் கல்வி பயின்று தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!

Wednesday, July 8, 2009

விசாரணை கமிஷன் - குறும்படம்

சா கந்தசாமி அவர்கள் எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நூலை சென்னை தூர்தர்ஷன் ஒரு குரும்படமாக்கியுள்ளது. சென்ற வாரம் இதன் முதல் காட்சியைக் காண நேர்ந்தது. படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா இயக்குனர் வசந்த் அவர்கள். வசந்த் அவர்களை நினைக்கும்போது முதலில் ஞாபகம் வருவது "கேளடி கண்மணி" என்ற படம்தான். SPB அவர்களை அதில் கதாநாயகனாகப் பார்த்தும், "மண்ணில் இந்த காதல்" என்ற அற்புதமான பாடலைப் பாடி, அதுவும் ஒரு சரனத்தில் மூச்சுவிடாமல் வெகு நேரம் பாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.

படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

Monday, March 9, 2009

ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்

காலஞ்சென்ற சங்கீத மேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைப் பற்றி பல அருமையான நகைச்சுவை கலந்த விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.

கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"

கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)

Monday, February 2, 2009

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழிசையைப் பற்றி எழுதுகிறார்.

http://jeyamohan.in/?p=1416#

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!

Sunday, January 25, 2009

ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!

இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.

Tuesday, January 20, 2009

நாளை மற்றும் ஒரு நாளே

G நாகராஜன் எழுதிய "நாளை மற்றும் ஒரு நாளே" நூலைப் படித்தேன். 1973-74 ஆண்டுகளில் எழுதியது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான முறையில் எழுதப்பட்டதுப் போல் இருந்தது. படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கத் தோணவில்லை. நடையும் நமது வாசிப்புக்கு ஏற்றதாக இருந்தது. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு Gone with the Wind நூலில் வரும் கிடைசி வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது - "Afterall tomorrow is another day!" பல இலக்கியவாதிகள் இதை ஒரு முக்கியமான நூல் என்று கருதுகிறார்கள். இந்த 'முக்கியமான நூல்' என்கிற ஒரு வாசகமே தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. சங்கீதத்தில் அப்படி ஒரு வாசகத்தை நான் கேட்டதில்லை. இந்த 'முக்கியமான' விஷயங்களை அனுபவிப்பதும் ஒரு தனி இன்பமாகத் தான் இருக்கிறது.

இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் சங்கீதத்தில் "ramnad கிருஷ்ணன் பாட்டைக் கேளுங்கள்! அவர் ஒரு முக்கியமான பாடகர்!"

ஜெயகாந்தனின் "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் verbose ஆனாலும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.

Thursday, January 15, 2009

சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்

ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் - தேவி பாரதி

தேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை 'வரலாற்றை அறிதல்' என்ற முறையில் எழுதி இருக்கிறார். குறிப்பாக 1977 Emergency காலத்தில் அவருடைய பள்ளி அனுபவங்களும், 1984 தேர்தலின் பொழுது ஒரு சுவர் ஓவியராக வேலை செய்த அனுபவங்களையும் மிக ரசமாகவும் எளிய நடையில் எழுதி இருக்கிறார். படிப்பதற்கும் ரொம்பவும் சுவையாக இருந்தது. இது போன்ற எழுத்துக்களில் தனி நபர்களின் அனுபவங்கள் எப்படி ஒரு கால கட்டத்தின் வராலாற்றுடன் இணைகிறது என்ற ஒரு அழகான வடிவம் கிடைக்கிறது. ஒரு காலகட்டத்தின் வரலாறு பொதுவாக ஒரு academic பார்வையுடன் தான் எழுதப்படும். ஆனால் எல்லோரும் வரலாறு எழுதலாம் என்ற ஒரு தொனியில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் சேர்க்கும் பொழுது அந்த காலகட்டத்தின் பல அம்சங்கள் நன்றாக விரிவடைகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, MLA அவர்களின் நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் நன்றாகக்க் கையாண்டப்பட்டுள்ளன. பொதுவாக காலச்சுவடு போன்ற சிறு பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது எழுத்தாளர்களுடைய நவீன மொழி எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் படித்த தமிழ் கொஞ்சம் பழமையானது. சுமார் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை சொல்லலாம். ஆனால் தேவி பாரதியின் நடையில் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் இல்லை.

கிருஷ்ணன் நம்பி - சுந்தர ராமசாமி

சாகித்ய அகடெமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நூலைப் படித்தேன். இதே வரிசையில் மௌனி மற்றும் தி ஜானகிராமன் அவர்களைப்பற்றிய நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் இதில் சு ரா அவர்கள் கிருஷ்ணன் நம்பி எழுதிய சிறந்த சில சிறுகதைகளின் கதைத் தொகுப்பை வழங்கி அவருடைய தனிப்பட்ட விமர்சனத்தையும் சேர்த்து இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத் தொகுப்பை உடனே படக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

MV வெங்கட்ராம் அவர்களின் நித்யகன்னி இப்பொழுது தொடங்கி இருக்கிறேன். இதிகாசத்தை கற்பனைக்கேற்ப விரிவு படுத்தும் ஒரு முயற்சி. கிட்ட தட்ட கோபலகிருஷ்ண பாரதி திருநாளைப்போவார் சரித்திரத்தை நந்தனார் சரித்திரமாக செய்ததைப்போல்.

கிடைத்தது கமர்கட்!

சமீபத்தில் ஜெயா டிவியில் என்னுடைய நிகழ்ச்சியில் 'சின்ன சின்ன ஆசைகள்' என்ற ஒரு பகுதியில் "இந்த காலத்துல கமர்கட் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டேன்." நிகழ்ச்சி ஒளிபரப்பி ஓரிரு வாரத்திற்குள் ஒரு ரசிகர் மதுராந்தகத்திலிருந்து வந்து வீட்டில் செய்த கமர்கட்டைக் கொடுத்தார்! இது போன்ற சின்ன ஆசையாயிருந்தால் பரவாயில்லை! ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால்??? இதற்குத்தான் அந்த காலத்து மகாராஜக்களைப்போல் ஒரு கனவானின் ஆதரவு தேவை!

அடுத்து மதுரைக்கு சென்றபொழுதும் ஒரு அன்பர் கமர்கட் கொண்டு கொடுத்தார்! இனி அறுபத்து மூவர் திருவிழா வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.