Sunday, January 25, 2009

ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!

இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.

Tuesday, January 20, 2009

நாளை மற்றும் ஒரு நாளே

G நாகராஜன் எழுதிய "நாளை மற்றும் ஒரு நாளே" நூலைப் படித்தேன். 1973-74 ஆண்டுகளில் எழுதியது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான முறையில் எழுதப்பட்டதுப் போல் இருந்தது. படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கத் தோணவில்லை. நடையும் நமது வாசிப்புக்கு ஏற்றதாக இருந்தது. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு Gone with the Wind நூலில் வரும் கிடைசி வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது - "Afterall tomorrow is another day!" பல இலக்கியவாதிகள் இதை ஒரு முக்கியமான நூல் என்று கருதுகிறார்கள். இந்த 'முக்கியமான நூல்' என்கிற ஒரு வாசகமே தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. சங்கீதத்தில் அப்படி ஒரு வாசகத்தை நான் கேட்டதில்லை. இந்த 'முக்கியமான' விஷயங்களை அனுபவிப்பதும் ஒரு தனி இன்பமாகத் தான் இருக்கிறது.

இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் சங்கீதத்தில் "ramnad கிருஷ்ணன் பாட்டைக் கேளுங்கள்! அவர் ஒரு முக்கியமான பாடகர்!"

ஜெயகாந்தனின் "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் verbose ஆனாலும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.

Thursday, January 15, 2009

சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்

ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் - தேவி பாரதி

தேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை 'வரலாற்றை அறிதல்' என்ற முறையில் எழுதி இருக்கிறார். குறிப்பாக 1977 Emergency காலத்தில் அவருடைய பள்ளி அனுபவங்களும், 1984 தேர்தலின் பொழுது ஒரு சுவர் ஓவியராக வேலை செய்த அனுபவங்களையும் மிக ரசமாகவும் எளிய நடையில் எழுதி இருக்கிறார். படிப்பதற்கும் ரொம்பவும் சுவையாக இருந்தது. இது போன்ற எழுத்துக்களில் தனி நபர்களின் அனுபவங்கள் எப்படி ஒரு கால கட்டத்தின் வராலாற்றுடன் இணைகிறது என்ற ஒரு அழகான வடிவம் கிடைக்கிறது. ஒரு காலகட்டத்தின் வரலாறு பொதுவாக ஒரு academic பார்வையுடன் தான் எழுதப்படும். ஆனால் எல்லோரும் வரலாறு எழுதலாம் என்ற ஒரு தொனியில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் சேர்க்கும் பொழுது அந்த காலகட்டத்தின் பல அம்சங்கள் நன்றாக விரிவடைகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, MLA அவர்களின் நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் நன்றாகக்க் கையாண்டப்பட்டுள்ளன. பொதுவாக காலச்சுவடு போன்ற சிறு பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது எழுத்தாளர்களுடைய நவீன மொழி எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் படித்த தமிழ் கொஞ்சம் பழமையானது. சுமார் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை சொல்லலாம். ஆனால் தேவி பாரதியின் நடையில் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் இல்லை.

கிருஷ்ணன் நம்பி - சுந்தர ராமசாமி

சாகித்ய அகடெமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நூலைப் படித்தேன். இதே வரிசையில் மௌனி மற்றும் தி ஜானகிராமன் அவர்களைப்பற்றிய நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் இதில் சு ரா அவர்கள் கிருஷ்ணன் நம்பி எழுதிய சிறந்த சில சிறுகதைகளின் கதைத் தொகுப்பை வழங்கி அவருடைய தனிப்பட்ட விமர்சனத்தையும் சேர்த்து இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத் தொகுப்பை உடனே படக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

MV வெங்கட்ராம் அவர்களின் நித்யகன்னி இப்பொழுது தொடங்கி இருக்கிறேன். இதிகாசத்தை கற்பனைக்கேற்ப விரிவு படுத்தும் ஒரு முயற்சி. கிட்ட தட்ட கோபலகிருஷ்ண பாரதி திருநாளைப்போவார் சரித்திரத்தை நந்தனார் சரித்திரமாக செய்ததைப்போல்.

கிடைத்தது கமர்கட்!

சமீபத்தில் ஜெயா டிவியில் என்னுடைய நிகழ்ச்சியில் 'சின்ன சின்ன ஆசைகள்' என்ற ஒரு பகுதியில் "இந்த காலத்துல கமர்கட் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டேன்." நிகழ்ச்சி ஒளிபரப்பி ஓரிரு வாரத்திற்குள் ஒரு ரசிகர் மதுராந்தகத்திலிருந்து வந்து வீட்டில் செய்த கமர்கட்டைக் கொடுத்தார்! இது போன்ற சின்ன ஆசையாயிருந்தால் பரவாயில்லை! ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால்??? இதற்குத்தான் அந்த காலத்து மகாராஜக்களைப்போல் ஒரு கனவானின் ஆதரவு தேவை!

அடுத்து மதுரைக்கு சென்றபொழுதும் ஒரு அன்பர் கமர்கட் கொண்டு கொடுத்தார்! இனி அறுபத்து மூவர் திருவிழா வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.