சிட்டி என்ற PG சுந்தர்ராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு நேற்று போய்வந்தேன். ஒரு ஆறு வருடங்களுக்குமுன் அவரைச்சந்தித்து பேசிய அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் ஏற்பட்ட காலம். பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவில் கச்சேரிக்காக வந்த திரு வேணுகோபால் சிட்டி அவர்களின் மகன் என்று தெரிந்து கொண்டேன். சிட்டியும் திஜாவும் எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயண நூலை படித்திருக்கிறேன். அதனால் சிட்டி என்ற பெயர் சொன்னவுடன் புரிந்து கொண்டேன். அதுவும் அந்த நூலில் சங்கீதத்தைப் பற்றிய சில விஷயங்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டதனால் ஞாபகம் இருந்தது. தெரிந்தவுடன் அவரைப் போய் சந்தித்தேன். அவருக்கு அப்போது தொண்ணூறு வயதுக்குமேல் இருக்கும். ஆனால் எந்த ஒரு மன தளர்ச்சியும் தெரியவில்லை. அப்போது பல அறிய விஷயனகளைப்பற்றி பேசினார். அவர் ஒரு மதுரை மணி அய்யர் ரசிகர் என்றும் "மதுரை மணி கச்சேரி" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Maduraa bell court" என்று சொல்லுவார்களாம். திருச்சியில் ஒரு இடத்தில் மதுரை மணி அய்யர் ரசிகர்கள் கூடும் மண்டபம் ஒன்றில் அவர் அடிக்கடி கச்சேரி செய்வார். அந்த இடத்தை வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேச இயர் "மணி மண்டபம்" என்று சொல்லுவாராம்!
அன்று சிட்டி அவர்கள் எனக்கு அவருடைய வாழ்க்கை நூலாகிய "ஒரு சாதாரண மனிதனின் கதை" கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதைப் படித்தப்பிறகு எனக்கு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி படிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு முறை புத்தகக் கண்காட்சியில் PS ராமையா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற நூலை வாங்கிப் படித்தேன். சிட்டி அவர்களைச் சந்தித்தப் பிறகு அவர் என் கச்சேரியைக் கேட்க வந்தார். நான் அன்று சன்முகப்ரியாவில் "மரிவேரே" கிருதியைப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் அந்த பாடல் மதுரை மணி அய்யர் அழகாகப் பாடுவார் என்று நினைவு கூர்ந்து சந்தோஷப் பட்டார்.
சிட்டியின் வாழ்க்கை வரலாற்றில் எனக்குப் பிடித்த ஒரு முக்கியமான் இடம் அவர் பாரதியார் விஷயத்தில் கல்கிக்கு எழுதிய கடிதம். அந்த ஒரு நகைச்சுவை, கிண்டல், கூர்மையான வாதம் எல்லாம் அற்புதாமாகத் தெரிகிறது. இதிலே கல்கி பாரதியை மேல் நாட்டுப் புலவர்களுக்கு ஈடாக வைக்கக் கூடாது என்று எழுதியதை எதிர்த்து சிட்டி குடுக்கிற பதில்தான் அந்த கடிதம். இந்தியாவில் நாம் பொதுவாக நம் சமகாலத்தவரின் பெருமைகளைப் பேசுவதற்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இசையில் தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றவர்கள் அவர்கள் காலத்திற்குப் பிறகு அதிக அளவில் போற்றப்படுகிறார்கள். அதே போல பாரதிக்கும் இதே கதி தான் என்று தெரிந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போதும் டெண்டுல்கரை ஒத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். சிட்டி தைரியமாக பாரதியின் பெருமையை விளக்கி கல்கியின் வாதத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்.
நடந்தாய் வாழி காவேரி நூலை நான் ஆங்கிலத்தில்தான் படித்தேன். சமீபத்தில் தமிழ் பிரதி ஒன்று கிடைத்தது. விரைவில் படிக்க வேண்டும்.
Sunday, May 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சஞ்சய்,
மதுரை மணி -> ஒலிக்கும் மணி -> மணியான மண்டபம்...
சுவை!
இலக்கியமும் இசையும் நல்ல ஜூகல்பந்தி போல.சபாஷ்.மணிஐயர் குறித்த சம்பவங்களும்,சிட்டி பற்றிய பதிவுகளும் உங்கள் மணிப்ரவாளநடையில் அருமை சஞ்சய்.
Post a Comment