Monday, March 9, 2009

ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்

காலஞ்சென்ற சங்கீத மேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைப் பற்றி பல அருமையான நகைச்சுவை கலந்த விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.

கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"

கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)

10 comments:

குமரன் (Kumaran) said...

இப்போது தான் மகாராஜாக்கள் இல்லையே. :-)

கனவான்கள்? அந்தக் காலத்தில் கனம் பொருந்திய கனவான்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் என்னைப் போன்ற 'கன'வான்கள் தான் உண்டு. உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை பார்த்து கனம் ரொம்பத் தான் கூடிப்போயாச்சு. :-)

Unknown said...

well, sanmAnam is the utter loyalty of your fans...that elusive term intangible, i guess...

Sampat said...

வருமானம் இல்லை - ஆயின்
வருமா?நம் அபிமானம் - நிலை
பெறும் பரிவு, அன்பே பெரும் ஸன்மானம்!
பொருள் இதற்காகுமோ ஸரிஸமானம்!


(சஞசய், சும்மா.... Serious ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதில் ஏழு ஸ்வரங்களும் வருமாறு எழுதியுள்ளேன். வாசகர்கள், வருமா? நம் அபிமானம் என்று படிக்கவும்)

ஆண்டாள்

Sampat said...

ஆண்டாள் என் மனைவியின் பெயர். நாமும் SUJATHA போல் மரியாதை தரலாமே என்ற விருப்பம் தான்!!

ஜெயமோகன் said...

அன்புள்ள சஞ்சய்

மலையாள ஓவியரான 'நம்பூதிரி' அவர் சுயசரிதையை எழுத்துக்கள் மற்றும் வரைபடங்களுடன் அருமையான நூலாக எழுதியிருக்கிறார். அதில் அவரது இளமையில் நெருங்கிபப்ழகிய செம்பை வைத்யநாத பாகவதர் பற்றி நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகளையும் அற்புதமான கோட்டுப்படங்களையும் அளித்திருக்கிறார்.செம்பை மார்பு தொங்க அமர்ந்திருக்கும் காட்சி அழகானது.

செம்பையின் ஒரு ஜோக்

ரயிலில் ஒருவர் செம்பையிடம் கேட்டார். அவரது குடுமியை மட்டுமே அடிபப்டையாகக் க்ண்ட கேள்விதான்.

''பாகவதராக்குமோ?''

''ஓ!'' என்றார் செம்பை-- ஆமோதிப்பாக

''அரியக்குடியா?''

''ஓ'' என்றார் செம்பை மறுப்பாக -- பாலக்காட்டில் எல்லாவற்றுகுமே ஓ தான்

''செம்ம்மங்குடியா?''

''ஓ'' என்றார் செம்பை.

அவர் கொஞ்ச நேரம் பாகவதர் பெயர்களுக்காக தேடிவிட்டு துணிந்து அடித்தார் ''அப்டீன்னா, குன்னக்குடியா?''

செம்பை சற்றே கடுப்பாகி சொன்னார். ''செம்பையாக்கும். குடி இல்லை கேட்டேளா?''

இன்னொரு ஜோக், இது செம்பையைப்பற்றி வி.கெ.என் என்னும் மலையாள எழுத்தாளர் சொன்னது

செம்பைக்கு அறுபதுவயதுவாக்கில் திடீரென்று குரல் அடைத்துப் போயிற்று. பாடுவது மட்டுமல்ல பேச்சும் முடியாமல் ஆகியது.

நேராக குருவாயூரப்பனிடம் போனார். ''கேட்டையோ செறுக்கா, எனக்கு இப்பம் பாடமுடியல்லை. என்ன செய்யபோறாய்?''

குருவாயூரப்பன் பெண்கள்பக்கமாக பார்த்துப் பேசாமலிருந்தார்

''வாழைபபழம் சீனி என்ன வேணுமாலும் கேளூ. ஆறுமாசம் கழிஞ்சு வந்து துலாபாரம் வச்சு தந்துடறேன். இப்போ குடுத்தா நான் குடும்ப ஸ்வத்துக்களை விக்கணம்...''

குருவாயூரப்பன் பொருட்படுத்தவில்லை. பார்த்தார் செம்பை அங்கே குந்தி விரதம் இருக்க ஆரம்பித்தார். நாற்பத்தொருநாள். கடும் விரதம். கோயிலின் பால்பாயசம் மடுமே ஒன்பதுவேளை ஆகாரம். தொட்டுக்கொள்ள நேந்திரம்பழமும் நெய்யும்.

ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு தொண்ணூறு நாள். ஜோலி ஆகவில்லை.

குருவாயூரப்பன் செம்பையைச் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. செம்பை வயலின் கற்றுக்கொண்டார். கோகுலாஷ்டமிக்கு சன்னிதியில் ஒரு வயலின் கச்சேரி செய்தார்

மறுநாளே குரல் திரும்பிவிட்டது. குருவாயூரப்பனின் இடுப்பு கொஞ்சம் நெளிந்து இருப்பதைப் பார்த்திருக்கலாம்-- செம்பையின் வயலின் கச்சேரியில் ஆனதுதான்

ஜெயமோகன்

நா.இரமேஷ் குமார் said...

Sanjay... good work
Rameshkumar

jeevagv said...

சஞ்சய்,
நீங்க விட்டகுறையை, ஜெமோ நிவர்த்தி செஞ்சுட்டார்!
:-)

ரா.கிரிதரன் said...

அன்புள்ள சஞ்சய்,

இசை சம்பந்தமான நான் படித்த மற்றொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது:

ஹைடனின் ஒத்திசைவை (Symphony) ஒருமுறை பயிற்சிசெய்து வந்தது பெர்லின் இசைக் குழு.ஒருங்கிணைப்பாளர் - ஹெர்பர்ட் கராஜன்,கெடுபிடிக்குப் பேர் போனவர்.
டூபா (tuba) எனப்படும் கருவி இசைப்பவர் 90 bar நிசப்தத்திற்குப் பிறகு வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் அவரின் இசை கோப்பில் உள்ளது.

ஆனால் 90 bar நிசப்தத்திற்குப் பிறகும் வாசிக்காமல் இருந்தார். இதைப் பார்த்த கராஜன் மிகுந்த கோபத்துடன் -"என்ன,90 தாண்டிவிட்டதே.இன்னும் என்ன செய்கிறீர்கள்"-என கேட்டார்.மற்றவறோ "எனக்கு எப்படித் தெரியும்?"-என்றார்.

கராஜனோ "எண்ணத் தெரியுமில்லையா?" - எனக் கேட்க.

அதற்கு அந்த வித்வான் "எனக்கு சும்மா இருக்குமாறுதானே முதல் 90 barகளில் கூறியிருந்தீர்கள்.எண்ணவா சொல்லியிருந்தீர்கள்?"- என்று கேட்டதில் கராஜனே சிரித்துவிட்டார்.

Anonymous said...

அன்புள்ள சஞ்சய்,

ஒரு வேண்டுகோள்.

நீங்கள் நிறைய கர்னாடக இசையைப் பற்றி எழுத வேண்டும்.குறிப்பாக ராகங்கள்,அவற்றின் சாகித்தியங்கள்,ஜன்ய ராக முறைகள்,மும்மூர்த்திகளின் ராக அமைப்புகள்.

நீங்கள் பாடும்விதமும் மிக approachableஆக இருக்கிறது.

நன்றி,
ரா.கிரிதரன்.
http://beyondwords.typepad.com

Ragztar said...

ஜெய மோகன் சொல்ற கதை ரொம்ப ரசமாக்கும் கேட்டேளா