Friday, January 29, 2010

கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு

கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். எழுவது வருஷங்களுக்குமுன் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அதில் இடம் பெரும் பாத்திரங்களும் அவர்களுடைய சிந்தனைகளும் போக்கும் காலத்தைக் கடந்ததாக உள்ளது. இது போன்ற சில நாவல்களில் எனக்கு பிடித்த விஷயங்கள் என்னவென்றால் அந்த காலகட்டத்தின் சில வாழ்க்கை குறிப்புகள் சரித்திரத்தில் இடம் பெரும் ஆவணக்குறிப்புகளாக அமைந்துள்ளன. கதையில் ஒரு ராயர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார். உடனே அந்த குரிப்பைத்தொடர்ந்து "அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்" என்று வருகிறது. இது ஒரு முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். இதற்ககு சான்று வேங்கடாசலபதி எழுதிய "அந்த காலத்தில் காபி இல்லை" என்ற ஆவண நூல். அதில் எப்படி காபி குடிக்கும் பழக்கம் உயர் தட்டு மக்கள் ஆங்கிலேயருடன் பழகி ஏற்படுத்திக்கொண்டது என்று அழகாக விவரித்துள்ளார். இது போல எண்பது வருஷங்களுக்கு முன்னே கும்பகோணத்தில் முதன்முதலில் பாருடன் சேர்ந்த ஒரு ஹோட்டல் தொடங்கியதைப்பற்றியும் குறித்துள்ளார். அந்த காலத்திலேயே "ஓபன் மேரேஜ்" என்ற ஒரு முறையை பின்பற்றிய தம்பதியரும் கதையில் இடம் பெறுகிறார்கள். தி ஜா, கு பா ர, வெங்கட்ராம், போன்ற தஞ்சாவூர் ஜில்லா எழுத்தாளர் வரிசையில் கா நா சுவும் ஒரு முக்கியமனாவர்.